Sunday, July 10, 2011

குறளும் நிகண்டுகளும்

குறளும் நிகண்டுகளும்

இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு
வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்”
என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள்
மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன.
பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு
சொல் கால வர்த்தமானங்களில் வெவ்வேறு பொருள்களை
கொண்டு வழங்குதல் கண்கூடு. ஆயின், நிகண்டுகள் அவற்றைத்
தொகுத்துவதுமல்லாமல் அவற்றை பின்னைத் தலைமுறையினருக்குப்
பதிவுச் செய்யும் காலக்கண்ணாடிகள் என்றால் மிகையாகாது.

தமிழ் நிகண்டுகள்

தமிழ் நிகண்டுகளின் தொடக்க காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு1
என்று அறிஞர்கள் கூறுவர். நிறைய தமிழ் நிகண்டுகள் இருந்தாலும்,
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி ஆகியவை மிக
முக்கியமானதாகக் கருதப் பட்டுவருகிறது. இவற்றில் திவாகரம்
காலத்தால் முந்தையது. இதனையொட்டியக் காலத்தில் எழுந்தது
பிங்கல நிகண்டு என்னும் பிங்கலாந்தை. சூடாமணி நிகண்டுக்
காலத்தால் மிக பிந்தையது. எனினும், மற்றைய எல்லா
நிகண்டுகளிலும் மிகப் பிரபலமானது இதுவேயாம். இதன்
காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு2 என்பர்.

திருக்குறள் கடவுள் வாழ்த்து

குறளாசிரியர் தேவர் பெருமான், கடவுள் வாழ்த்தில் தான்
வழிப்படும் இறைவனைப் போற்றி வணங்கியிருக்கிறார். அவர்
எந்த இறைவனை வணங்கியிருக்கிறார் என்பதை, இங்கு
நிகண்டுகள் மூலம் ஆராய்ந்து, ஒப்பு நோக்குவோம். பின்னர்,
அந்நிகண்டுகள் அவ்வாறு கூறுவதற்கு இலக்கியத் தரவுகள்
உள்ளனவா என்றும் பார்ப்போம்.

குறளாசிரியர், தான் வழிப்படும் இறைவனை கீழ் வரும்
சொற்களைக் கொண்டு குறித்திருக்கிறார். (மணக்குடவர் வரிசைப்படி)

1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. தனக்குவமை இல்லாதான்
5. அறவாழி அந்தணன்
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
7. இருவினையும் சேரா இறைவன்
8. பொறிவாயில் ஐந்தவித்தான்
9. இறைவன்
10. எண்குணத்தான்

கடவுள் வாழ்த்து - நிகண்டுகள் – ஒப்புநோக்கு

எல்லா நிகண்டுகளையும் ஒப்பு நோக்குவது இயலாதது. ஏனெனில்,
சில நிகண்டுகள் காலத்தால் மிக, மிக பிந்தியவை. மேலும்,
அந்நிகண்டுகளில் முக்கிய தெய்வங்களைக் குறிக்கவில்லை.
குறிப்பாக, நாமதீப நிகண்டில் அருகன் நாமங்கள் (பெயர்)
குறிக்கப்படவில்லை. இதனான், முக்கிய, சிறந்த நிகண்டுகளான
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி மற்றும் கயாதரம் முதலிய
நிகண்டுகளை மட்டும் இங்கு ஒப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.





மேலே காட்டப்பட்ட அட்டவணையில் இருந்து, சில சொற்கள் சிவன்,
விஷ்ணு, அருகன், புத்தன் ஆகியோருக்கு பொதுவாக வழங்கப்பட்டிருப்பது
தெரியவரும். எனினும், பல குறள் சொற்றொடர்கள் அருகனுக்கு
மட்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டிருப்பதும் காண்க.

எந்த ஒரு நூலாசிரியரும் தான் சார்ந்த சமயக் கடவுளர்களை
வணங்குவார்களேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும்,
மற்ற பாடல்களில் பிற சமயக் கடவுளர்களை வணங்குவதுத்
தொன்று மரபில்லை. இம்மரபின் அடிப்படையில் மேலேக்
காட்டப்பட்ட அட்டவணையை நோக்க, குறளாசிரியர் உள்ளத்தை
எளிதில் புரிந்துக் கொள்ளலாம். என்னை? :-)

இலக்கியச் சான்றுகள்

1.ஆதிபகவன்

“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்

ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை

“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு

2. வாலறிவன்

கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்

இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை

அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்

உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி

பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)


3. மலர்மிசை ஏகினான்

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது”
– சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை -(200 - 205)

“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” – சூளாமணி - 187


“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 188


“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 189



“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” – அறநெறிச் சாரம் - 1

“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ!
நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” – திருப்பாமாலை - (1-5)

“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே” - திருக்கலம்பகம்

“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - திருக்கலம்பகம் - 74


“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - தோத்திரத் திரட்டு - 6

“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு - 11

‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” – திருஇரட்டைமணி மாலை - 1

4. தனக்குவமை இல்லாதான்

(இச்சொற்றொடர் தமிழ்ச் சமண இலக்கியங்களில் குறித்திருக்கிறது. தற்போது என்
நினைவில் இல்லை. பின்னர் நூலறிந்து எழுதுகிறேன். வடமொழித் தரவுகளும்
கொடுக்க முடியும்.


5. அறவாழி அந்தணன்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே
- திருநூற்றந்தாதி - 27

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி - 1611

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் - 25

6. வேண்டுதல் வேண்டாமை இலான்

வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டு கிடந்தால் புறத்திருந்த வெங்கூற்றம் போகும் போலும்
– திருக்கலம்பகம் – 58

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்பதிகாரம் (10:168-169)

பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
– சீவக சிந்தாமணி – 3

உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீயிலையேல்
– மேருமந்தரப் புராணம் – 128

7. இருவினையும் சேரா இறைவன்

“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”
– யசோதர காவியம் – 300

”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………” – ஜீவசம்போதனை – 27

8.பொறிவாயில் ஐந்தவித்தான்

பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே – ஜீவசம்போதனை – 1:29)

ஐவரை வென்றோன் அடியினை – சிலப்பதிகாரம் – 10:198)

பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வன் – சீவக சிந்தாமணி – 2563

பொறியிலா அறிவன் நீ – மேருமந்தர புராணம் – 1000


9. இறைவன்

கண்ணி னாலொன்றுங் காணாய் காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய் பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா
– நீலகேசி - (159)

"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே"
– சூடாமணி நிகண்டு (1)

குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை – அருங்கலச் செப்பு (1)

நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி – நீலகேசி – 1

10. எண்குணத்தான்

பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)

எண் குணனும்
கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469

“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)

பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12

எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3

ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.

கல்வெட்டுப் பாடல்:

“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை
திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”

ஒவ்வொரு சொற்களுக்கும் குறைந்தது பத்து எடுத்துக்காட்டுகள்
கொடுக்க முடியும், விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை.

முடிபு:

இதுகாறும், பார்த்தத் தரவுகளின் மூலமும், நிகண்டுகளின்
தரவுகளின் அடிப்படையிலும் தேவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!

இரா.பானுகுமார்,
சென்னை


அடிக்குறிப்பு:
(குறிப்பு: * எண்குணன் – பிங்கல நிகண்டு சில ஏடுகளில் தான்
சிவனுக்கு எண்குணத்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு பாடல்களை திருத்தி பதிக்க
முயன்ற வரலாறும் இங்கு நினைக்கத்தக்கது.)

1. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.134)
2. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.15)

13 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:)
நிகண்டுகளைத் திரட்டித் தந்தமைக்கு நன்றி பானுகுமார்!
ஆனால்...
ஆனால்...
ஆனால்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன் சில்க்ஸ் தான் முதலில் பட்டு சல்வார்-கமீஸ் கொண்டு வந்தது என்பதற்கு தரவு!

அதை எப்படிக் குடுப்பது?

அதைக் கொண்டு வந்த காலத்தில் இருந்தோ, அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தோ தான் குடுக்கணும்!

இன்னிக்கி தேதியில் இருக்குற டிசைனை அடுக்கடுக்கா குடுத்தா எப்படி?
ஏற்கனவே வந்த டிசைனை வச்சி, பலரும் பின்னாளில் அதே போல் செஞ்சிருக்கக் கூடும் அல்லவா?:)))

வள்ளுவப் பெருந்தகை கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்ட சொற்கள் எல்லாம்...
வள்ளுவர் காலத்திலோ, அவருக்கு முற்பட்ட காலத்திலோ, அருகப் பெருமானைக் குறித்ததா? அதற்கான தரவு இருக்கா?

பின்னாளில் எழுந்த சீவக சிந்தாமணி, நிகண்டுகள், திருநூற்றந்தாதி-இல் இருந்து குடுத்தா எப்படி?
வள்ளுவர் பயன்படுத்திய சொற்களை, அவர்கள் தத்தம் தெய்வங்களுக்கு எடுத்தாண்டு இருக்கலாமே?

மேலும் நீங்கள் தந்துள்ள தரவுகள் பலவும் சமண நூல்கள் மட்டுமே! ex: சீவக சிந்தாமணி, நீலகேசி, தோத்திரத் திரட்டு, திருநூற்றந்தாதி!
சார்பற்ற, பொதுவான தரவுகள் அல்லவா, தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்?

எனவே, இவை அடுக்கடுக்கான தரவுகள் போல் தோன்றினாலும்...
//வள்ளுவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!//அல்ல! :))

என்னை? :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

1. வள்ளுவரின் சமயம்=சமணம் என்பதை இத்துணைக் கடினப்பட்டு "நிறுவி", அதனால் தமிழுக்கு விளையும் பயன் யாது?

2. வள்ளுவப் பெருமகனார், அக்காலத்தில் செய்த மாபெரும் புரட்சி=தன்னை எதற்குள்ளும் குறுக்கிக் கொள்ளாது, மானுடம் என்பதற்கான நூலைப் படைத்தது!

3. சங்கத் தமிழ் இலக்கணங்கள், திணை, துறை என்பதைக் கூட மீறி, குறிஞ்சி, முல்லை என்று எதையுமே குறிப்பிடாது, தோழி வரைவு கடாதல் போன்ற துறை அடையாளங்களைக் கூடத் தவிர்த்து, கூடுமான வரை பொது நூலினைச் செய்தது!

4. வெறுமனே போதிக்கும் நீதி நூலாகவும் இல்லாது, இன்பத்துப் பாலையும் சேர்த்தே பேசியது!

5. இப்படி அக்காலக் கவிஞர்கள் யாருமே செய்யாத ஒன்றை, மாறுபட்ட கருப்பொருளை முன்வைத்த பெருங்கவிஞர் - அவரைத் தோண்டித் துழாவி, ஏன் சமயக் குறுக்கத்துக்குள் நெருக்க வேண்டும்? அதனால் விளையும் பயன் என்ன?

- இவையே என் மனத்தில் எழும் கேள்விகள்!
- ஒளிவு மறைவு இல்லாது, உங்களிடம் கேட்டு விட்டேன், உங்களிடம் நல்ல தளத்தில் உரையாட முடியும் என்று அறிந்தவனாதலால்...

குமரன் (Kumaran) said...

திருக்குறளின் ஆசிரியர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்ற ஆய்வு பல காலமாக நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு சமயத்தாரும் பல தரவுகளைக் காட்டுகிறார்கள். பிற ஆய்வாளர்களும் அவரவர்களுக்கு ஏற்றதை ஏற்றுக் கொண்டு வழி மொழிகிறார்கள். இன்னும் தொடர்ந்து இந்த ஆய்வு நடந்து கொண்டே தான் இருக்கும். அதனால் ஏன் செய்கிறீர்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்விகளை நான் கேட்கபோவதில்லை.

ஆனால் 'திருக்குறளில் வரும் பெயர்களை தங்கள் கடவுளுக்கு பின் வந்தோர் புழங்கியிருக்கலாமே' என்ற கேள்வி மிகவும் நுண்ணிய கேள்வி. அதுவும் சமயங்கள் தொடர்ந்து தமக்குள் பேசி ஒன்றிற்கொன்று தத்துவங்களைக் கடன் கொடுத்து செல்வாக்கு செலுத்தி வளர்ந்து வந்த நம் நாட்டு வரலாற்று நிலையில் இந்த கேள்வி இன்னும் முதன்மையானது.

Banukumar said...

தொடர்ந்து வருவதற்கு நன்றி கேஆர்எஸ்!

//இன்னிக்கி தேதியில் இருக்குற டிசைனை அடுக்கடுக்கா குடுத்தா எப்படி?
ஏற்கனவே வந்த டிசைனை வச்சி, பலரும் பின்னாளில் அதே போல் செஞ்சிருக்கக் கூடும் அல்லவா?:)))//

இந்த எடுத்து காட்டு இங்கே (இறைதன்மைக்கு) பொருந்தாது!

இங்கே விவாதிக்கப்படும் பொருள் இறைமை அல்லது இறை தன்மைகளை.

குறளில் வரும் இறைதன்மை அருக கடவுளுக்கு பொருந்துகிறது என்பதைக் குறிக்கவும் அதற்கு நிகண்டுகளும் எவ்வாறு சாட்சியம் சொல்கிறது என்பதும்தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

//வள்ளுவப் பெருந்தகை கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்ட சொற்கள் எல்லாம்...
வள்ளுவர் காலத்திலோ, அவருக்கு முற்பட்ட காலத்திலோ, அருகப் பெருமானைக் குறித்ததா? அதற்கான தரவு இருக்கா?//

கடை சங்க நூலாக கருதப்படும் நூல் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் ஏன் தங்கள் கண்களுக்கு தெரியவில்லை!
:-)

//மேலும் நீங்கள் தந்துள்ள தரவுகள் பலவும் சமண நூல்கள் மட்டுமே! ex: சீவக சிந்தாமணி, நீலகேசி, தோத்திரத் திரட்டு, திருநூற்றந்தாதி!
சார்பற்ற, பொதுவான தரவுகள் அல்லவா, தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்?//

:-)

குறள் கூறும் இறைமை சொற் றொடர்களை சமண இலக்கியங்கள் பொன்னேபோல் போற்றி தங்கள் நூல்களில் ஆண்டிருக்கிறார்கள் என்பதற்குதான் அத்தனை தரவுகள் கூறியிருக்கிறேன்.

குறள் கூறும் இறைதன்மைகள் மற்ற கடவுளரைக் குறிக்கும் என்றால் அதற்கு தக்க சான்றுகள் நீங்கள் எழுதுங்கள். பக்தியை ஏற்றி வந்த தமிழ் சைவ, வைணவ இலக்கியங்கள் ஏராளம். அதிலிருந்து சான்றுகள் கூறுங்கள். அதிகம் தரவேண்டாம்! ஒவ்வொரு இறைமை சொற்றொடருக்கு குறைந்தது பத்து சான்றுகள் தாருங்கள் ஐயா! வணக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்!

//பின்னாளில் எழுந்த சீவக சிந்தாமணி, நிகண்டுகள், திருநூற்றந்தாதி-இல் இருந்து குடுத்தா எப்படி?
வள்ளுவர் பயன்படுத்திய சொற்களை, அவர்கள் தத்தம் தெய்வங்களுக்கு எடுத்தாண்டு இருக்கலாமே? //

அதையேதான் நானும் கேட்கிறேன். ஏன் அச்சொற்றொடர்கள் சைவ, வைணவ சமயங்களில் எடுத்தாளப்படவில்லை? ஏன் சமண சமயத்தில் மட்டும் அதிகம் விரவி வருகிறதே? அது எவ்வாறு??

//மேலும் நீங்கள் தந்துள்ள தரவுகள் பலவும் சமண நூல்கள் மட்டுமே! ex: சீவக சிந்தாமணி, நீலகேசி, தோத்திரத் திரட்டு, திருநூற்றந்தாதி!
சார்பற்ற, பொதுவான தரவுகள் அல்லவா, தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்?//

கயாதர நிகண்டு சைவரால் எழுதப்பட்டது. இது தங்களுக்கு சான்றாக தெரியவில்லையா? சைவர்தானே, சிவனுக்கோ, விஷ்ணுவுக்கோ குறள் இறைத்தன்மைகளை ஏன் கூறவில்லை? அருகனுக்கே கூறியிருக்கிறாரே!! அதனால் குறளாசிரியர் அருகனைத்தான் வணங்குகிறார் என்பது இன்னொரு அங்கை நெல்லிக் கனி.

என்னை? :-)))))

இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar said...

//1. வள்ளுவரின் சமயம்=சமணம் என்பதை இத்துணைக் கடினப்பட்டு "நிறுவி", அதனால் தமிழுக்கு விளையும் பயன் யாது?//

சமண தமிழ் இலக்கியத்தில் மற்றுமொரு இரத்தினம் குறள் என்பதற்குதான்!!
:-)

//2. வள்ளுவப் பெருமகனார், அக்காலத்தில் செய்த மாபெரும் புரட்சி=தன்னை எதற்குள்ளும் குறுக்கிக் கொள்ளாது, மானுடம் என்பதற்கான நூலைப் படைத்தது!
3. சங்கத் தமிழ் இலக்கணங்கள், திணை, துறை என்பதைக் கூட மீறி, குறிஞ்சி, முல்லை என்று எதையுமே குறிப்பிடாது, தோழி வரைவு கடாதல் போன்ற துறை அடையாளங்களைக் கூடத் தவிர்த்து, கூடுமான வரை பொது நூலினைச் செய்தது//

இது சமணர்களின் பரந்த மனப்பாண்மையைக் காட்டுகிறது!

//4. வெறுமனே போதிக்கும் நீதி நூலாகவும் இல்லாது, இன்பத்துப் பாலையும் சேர்த்தே பேசியது!//

இன்பத்துப் பால் நாலடியாரிலும் உண்டு! தெரியுமோ? :-)

//5. இப்படி அக்காலக் கவிஞர்கள் யாருமே செய்யாத ஒன்றை, மாறுபட்ட கருப்பொருளை முன்வைத்த பெருங்கவிஞர் - அவரைத் தோண்டித் துழாவி, ஏன் சமயக் குறுக்கத்துக்குள் நெருக்க வேண்டும்? அதனால் விளையும் பயன் என்ன?//

முதல் பதிலை படியுங்கள் ஐயா!

//- இவையே என் மனத்தில் எழும் கேள்விகள்!
- ஒளிவு மறைவு இல்லாது, உங்களிடம் கேட்டு விட்டேன், உங்களிடம் நல்ல தளத்தில் உரையாட முடியும் என்று அறிந்தவனாதலால்...//

நன்றி கேஆர்எஸ்!

நிறைய எழுதியாகிவிட்டது ஐயா. என்னுடைய அடுத்த கட்டுரை, சமண வடமொழி இலக்கியங்களில் வருவதை தொகுத்து கூறுவேன்.

நன்றி!

இரா.பா,
சென்னை

Banukumar said...

வாருங்கள் குமரன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகிறீர்கள். கேஆர்எஸ் ஐயாவுக்கு கொடுத்த பதில்களைப் படிக்கவும்.

இரா.பா,
சென்னை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கடை சங்க நூலாக கருதப்படும் நூல் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் ஏன் தங்கள் கண்களுக்கு தெரியவில்லை!//

:)
சிலம்பு கடைச் சங்க நூலா?
சங்கம் மருவிய காலம் அல்லவா?

//குறள் கூறும் இறைமை சொற் றொடர்களை சமண இலக்கியங்கள் பொன்னேபோல் போற்றி தங்கள் நூல்களில் ஆண்டிருக்கிறார்கள் என்பதற்குதான் அத்தனை தரவுகள் கூறியிருக்கிறேன்//

அதை மறுக்கவில்லை!
ஆனால் அவை அனைத்தும் குறளுக்குப் பின் வந்வை!
திருக்குறளுக்கு முந்தைய இலக்கியங்களிலோ, குறள் காலத்திலேயோ, அருகப் பெருமான் அவ்வாறு குறிக்கப் பெறுகிறாரா? என்பதே அடிப்படைக் கேள்வி!

//பக்தியை ஏற்றி வந்த தமிழ் சைவ, வைணவ இலக்கியங்கள் ஏராளம். அதிலிருந்து சான்றுகள் கூறுங்கள். அதிகம் தரவேண்டாம்! ஒவ்வொரு இறைமை சொற்றொடருக்கு குறைந்தது பத்து சான்றுகள் தாருங்கள் ஐயா! வணக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்!//

ஹா ஹா ஹா
நான் தான் திருக்குறளையும் அதன் ஆசிரியரையும் சமயத்துக்குள் "அடைத்தல்" வேண்டாம்-ன்னு சொல்லுறேனே! அப்பறம் என் கிட்டயே சைவச் சான்று கேட்டா? :))

மொதல்ல திருவள்ளுவர் உருவச் சிலைக்குப் பட்டை போட்டிருக்கும் இடங்களில், பட்டையை நீக்கிப் பட்டையக் கெளப்பணும்! அதான் சரி! :)))

பின்னாளில் வந்த பக்தி இலக்கியங்களில், ஒவ்வொரு சொல்லாத் தேடித் தேடி, அதைக் குறளோடு பொருத்துவதில், எந்தவொரு பயனும் இல்லை!
குறள் காலத்திலேயே, அச்சொற்றொடர்கள் அருகப் பெருமானைக் குறித்ததா? என்ற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை அளியுங்கள்! போதும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஏன் அச்சொற்றொடர்கள் சைவ, வைணவ சமயங்களில் எடுத்தாளப்படவில்லை? ஏன் சமண சமயத்தில் மட்டும் அதிகம் விரவி வருகிறதே? அது எவ்வாறு??//

பின்னாளைய சமண நூல்கள், அனைவரும் அறிந்த இலக்கியமான திருக்குறளை, தங்களுக்கு ஆதாரமாக, அமைத்து வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
* இந்து நூல்களுக்குப் பெருங் காவியங்கள் இராமாயண/மகாபாரத வகையறாக்கள் உண்டு!
* சிலம்பு = சமணத்தை மட்டும் பேசவில்லை! பொதுவாக நின்றது!
* மணிமேகலை = பெளத்தக் காப்பியம்

அப்படி இருக்க, தமிழில், சமணத்தைச் சார்ந்த பேரிலக்கியம், சீவக சிந்தாமணி (10th CE) எழும் வரை, ஒன்று கூட இல்லை!
சமண நூல்கள், அனைவரும் அறிந்த இலக்கியமான திருக்குறளை ஒட்டியேயான சொற்றொடர்களை எடுத்தாண்டது இதனால் தானோ?

//கயாதர நிகண்டு சைவரால் எழுதப்பட்டது. இது தங்களுக்கு சான்றாக தெரியவில்லையா?//

கயாதர நிகண்டு எழுதிய சைவ முனிவர் - சரி தான்! ஆனால் அந்த நிகண்டில் புதிய சொல் ஒன்னு கூட இல்லை! பழைய நிகண்டுகளை ஒட்டியே எழுதப்பட்டது, பா வடிவம் மட்டும் வேற!
எனவே பழைய நிகண்டு சொற்களே இதிலும் உள்ளதே தவிர, சைவர் எழுதிய நிகண்டில் குறிக்கிறார் என்று பொருள் அல்லவே!
என்னை? :-)))))

//அங்கை நெல்லிக் கனி//

அங்கையில் மச்சம் கூடத் தெரியவில்லை! அப்பறம் எப்படி நெல்லிக்கனி? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//
>//கூடுமான வரை பொது நூலினைச் செய்தது//<

இது சமணர்களின் பரந்த மனப்பாண்மையைக் காட்டுகிறது!
//

சமணம் பரந்த மனப்பான்மை கொண்டது என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை! வைதீக மதங்களைப் போல் சாதி முறை பேணாத நல்ல சமயம்!

ஆனால் திருக்குறள் சமணர்களின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது-ன்னு மட்டும் சொல்லாதீக!
அப்படீன்னா மற்ற சமண இலக்கியங்கள் பலவும் சமணக் கருத்துக்களை நேரடியாகவே போதிக்கிறதே? அவற்றுக்கு எல்லாம் பரந்த மனப்பான்மை இல்லையா? :)))

//என்னுடைய அடுத்த கட்டுரை, சமண வடமொழி இலக்கியங்களில் வருவதை தொகுத்து கூறுவேன்//

அடுத்த கட்டுரைக்கு வாழ்த்துக்கள்!

முடிப்பாக...ஒரே ஒரு புள்ளியில் தான் மாறுபடுகிறேன்...
திருக்குறளில் வரும் சொற்கள், அருகப் பெருமானைக் குறித்தது என்றால்...
அதே சொற்கள், குறள் காலத்திலும், குறளுக்கு முந்தைய காலத்திலும் புழங்கி இருப்பார்கள்! அப்படியான ஒரே ஒரு தரவைத் தர முடியுமா?

குறளுக்குப் பின்னால் தோன்றி, குறள் சொன்ன சொற்களையே எடுத்தாளும் நூல்கள், சரியான தரவு ஆகா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சமண தமிழ் இலக்கியத்தில் மற்றுமொரு இரத்தினம் குறள் என்பதற்குதான்!!//

பெளத்தத் தமிழ் இலக்கியம் = மணிமேகலை!(2-3 CE)! நேரடியான பெளத்தக் கருத்துக்கள்! தலைவன்/தலைவி பெளத்த சமயம் தழுவல்!

சமணத் தமிழ் இலக்கியம் = சீவக சிந்தாமணி (10th CE)! நேரடியான சமணக் கருத்துக்கள்!

சைவத் தமிழ் இலக்கியம் = திருமுருகாற்றுப்படை! பின்னால் வந்த தேவார, பெரிய புராணம் உட்பட! நேரடியான சைவக் கருத்துக்கள்!

ஆனால் திருக்குறளில் நேரடியான சமணக் கருத்துக்கள் இல்லை!
அதன் நோக்கம் = சமண போதனையும் கிடையாது!

* இப்படிச் சமண நோக்கமில்லா நூலுக்கு,
* ஒரே ஒரு அதிகாரமான கடவுள் வாழ்த்தை மட்டும் வைத்துக் கொண்டு..(1/133=just 0.7%)
* அதுவும் சில சொற்றொடர்களை மட்டுமே வைத்துக் கொண்டு
* மொத்த திருக்குறளும், "சமணத்தமிழ் இலக்கியத்தில் மற்றுமொரு இரத்தினம்" என்று சொல்லும் உங்கள் கூற்றை மறுக்கிறேன்!

வேணும்-ன்னா வள்ளுவரின் சமயம் = சமணமா இருக்கலாம்-ன்னு நீங்க சொல்லிக்கிடலாம்!
ஆனால் சமண போதனை இல்லாப் பொது நூலான திருக்குறளை, "சமணத்தமிழ் இலக்கியம்" என்று குறிப்பது...ஏலவே ஏலாது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எட்டுத் தொகை சங்க இலக்கியப் பாடல்களில், முருகன் பற்றியும், திருமால் பற்றியும் நிறையக் குறிப்புகள் வரும்!
மக்கள் வாழ்வியல் பற்றிப் பேசும் போது, அவர்கள் முருகனை/திருமாலை எதற்கெல்லாம் உவமையாகக் கொண்டார்கள் என்று இருக்குமே தவிர, பாட்டு என்னவோ அகப் பொருள்/புறப் பொருள் தான்!

முருகன்/திருமால்-ன்னு சொல்லு வந்துட்டதாலேயே, எட்டுத் தொகை என்பது சைவ நூல்/வைணவ நூல்-ன்னு சொன்னாச் சிரிக்க மாட்டார்களா?
அந்தச் சொல் வருவது அக்கால மக்கள் புழக்கம் என்ற அளவில் மட்டுமே!

அதே போல் தான் குறளும்! திருமகள், பின்னவள் என்றெல்லாம் வருவது மக்கள் புழக்கமே தவிர, சமய போதனை செய்ய அல்ல!

அப்படிப் போதிப்பதை நோக்கமாக இல்லாத ஒரு நூலை, சமயக் குறுக்கலுக்குள் அடக்கக் கூடாது என்பது தான் செறிவு! உள்ளங்கை நெல்லிக்கனி!
திருக்குறள் = சமண இலக்கியம் அன்று! தமிழ் இலக்கியம்

மற்றபடி, வள்ளுவர் சமயம்=சமணம் என்பதற்கு, உங்கள் தரவுகளுக்குக் காத்திருப்பேன்!
வள்ளுவர் காலத்திலோ, அதற்கு முன்னோ்....."அடியளந்தான், அறவாழி அந்தணன், இறைவன்" - இதெல்லாம் அருகப் பெருமானையே குறித்தது என்பதற்கான ஆதாரங்களே மிகவும் முக்கியம்! Logical Reasoning!

நல்ல ஆய்வுப் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

Banukumar said...

அன்பின் இரவிசங்கர்,


தங்களிடம் ஒரு கேள்வி. தமிழில் எழுந்த முதல் நூல் (எல்லா வகை) எது?

இரா.பா,
சென்னை